fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

February 23, 2012

நிலாக் கடல் ( இறகு 02 )



                   முகத்தில் பட்ட நீர் துளிகள். தடவிப் பார்க்கப்பட்ட போது கை நனைக்கப்பட்டது. கை நீட்டினால் கைக்கெட்டும் தூரம் வரை மழையில்லை. முகத்திலிருந்த நீர் துடைக்க காதலி நீட்டிய தாவணி முனைபோல் வந்தது தென்றல். மறுபடி கால் நனைப்பு. காலுக்கடியிலிருந்த மணர்த்துகல்கள் இடம் பெயர்கின்றன. உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு சொல்லி விட்டன. பவணி வந்தவளின் பல்லழகு எங்கும் பால் வெளிச்சம். அது யார் வரைந்த ஓவியம் அழிக்கப்பட்டுவிட்டது. முன் வந்தவனை பின் தள்ளி ஓடி வந்து அழித்து விட்டுச் சென்று விட்டான்.  யார் அது  இசை மீட்டுவது. பளிச்சென்று புகைப்படப்பிடிப்பு.தென்னோலைகள் நிலா வெளிச்சம் கடன் வாங்கி என்னை புகைப்படம் எடுத்தது. நான் நின்று கொண்டிருப்பது கடற்கரையில் அதுவும் பௌர்ணமிக்கடற்கரையில். 

                  எங்கும் நிசப்தம் இயற்கையின் சப்தம் மட்டும் சங்கீதம் பாடுகிறது. என்ன இசை இசை மைந்தர்கள் சங்கீதம்  திருடிய இடம் இது. மனது எண்ணம் வரையும் போதே ஆமோதித்து பாடல் பாடியது சில்லுரி. மூச்சுவிடாமல் நீண்டதொரு பாடல் ராகம் தாளம் தெரியாத என்னால் ஏதோ ஒரு ராகம் புரியப்பட்டது. ஆடம்பரமில்லா அடித்தளமாய் கடலின் விசாலம். விலாசம் இல்லாத பலபேருக்கு வாழ்வு கொடுகிறது. உறுதியாகிறது தூரத்தில் ஒரு தோணி கடல் தடவி பயணிக்கிறது. எத்தனை அதிஷ்டசாலி அந்த மீனவன்  இத்தனை அழகுக்குள்ளே அமைதியான அவனது வாழ்வு. நகர வாழ்வில் நசுங்கும் நாங்கள். எங்களின் காது வாகனசப்தங்களால் மறுத்து போய்விட்டன. எங்கள் மூச்சுக்களையும் பேச்சுகளையும் பார்வையையும் காசுக்காய் விற்று விட்டோம். 


                 ஏதோ தொலைத்து விட்டதாய் என் உள்ளம் உளரியது. உலகின் உள்ளங்கையில் எத்தனை அழகு. ஆம் இத்தனை நாளாய் ரசனையைத் தொலைத்து விட்டேன். இவ்வளவு நாளாய் எத்தனை இடங்களைத் தாண்டியிருப்பேன். அத்தனையையும் இந்த நவீனம் என்னிடமிருந்து பறித்து எடுத்ததாய் உணர்கிறேன். ஆழ் கடலின் அலைச் சப்தம் எனக்கு ஆறுதல் சொல்லியது. இது என் இடம் என்னைத்தவிர இங்கு வேறு மனிதரில்லை இங்கு நான் நானாய் இருக்கலாம். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை நான் யாரையும் கட்டுப்படுத்த தேவையுமில்லை.


                 என் கால்கள் இரண்டும் முழந்தாலிட  கைகள் இரண்டும் மணல் தொட்டது . கடல் நீர் விரல் நனைக்க கடல் காற்று தலை தடவியது. மனதின் கணங்கள் இறக்கப் பட்டதாய் உணர்வு. என் வாழ்வில் வலி தொடும் வேளைகளில் இந்த கடல் தண்ணீரில் கண்ணீர் வடித்திருக்கலாமோ. அப்படி பலர் வந்து கண்ணீர் சிந்தியதாலோ உப்பு நீராகியது இந்நீர். என் நீரையும் உன்னோடு இப்போது சேர்த்துக் கொள். கண்ணீர் சிந்தினேன் வாழ்வில் முதன் முறையாய் நிம்மதியாய் கண்ணீர் சிந்தினேன். நிம்மதி இப்பொழுது நினைவுகள் மட்டும் மீதம் வலிகளை வடித்து விட்டேன்.


                அப்படியே என் முகங்களை கடற்கரை மணலில் புதைத்தேன். அதன் வாசனையை என் நாசி உணரப்படும் அளவுக்கு புதைத்தேன். அமைதியாய் மூச்சடக்கி முழுமையாய் மண்ணில் படுத்தேன். என் பக்கத்தில் யாருமில்லை நான் மண்ணோடு ஒன்றி விட்டேன். அந்த நிசப்த நிமிடங்கள் எனக்கு மரணத்து மணிகளை ஞாபகமூட்டின. இப்படித்தான் முடியப்போகிறது ஒரு நாள் என் வாழ்வு இல்லை இல்லை எல்லோருடைய வாழ்வும். எத்தனை யதார்த்தம். எனக்கு வேறு எந்த மணித்துளியும் இந்த மணித்துளியை உணர்த்தவில்லை. ஒரு இயற்கையை இன்னொரு இயற்கையால்தான் உணர்த்த முடியும் உணரவும் முடியும். 


                  எழுந்தேன். சப்தமிட்டேன் என்னால் முடியும் வேண்டிய மட்டும் சப்தமிட என் சப்தம் தடுக்க முடியாது யாராலும். வைரமுத்துவின் கவிதைபோல் நான் இங்கு ஊர் வாயை மூடத் தேவையுமில்லை என் செவிகளை மூடத் தேவையுமில்லை. எனக்கு இந்த அமைதி தந்தது சுதந்திரம் இன்று. இந்த கடல் சாட்சியாய் எத்தனை நாடகம் நடந்து முடிந்தது அன்று. துப்பாக்கி வேட்டுகளாய் எவ்வளவு குருதிகள் ஒன்றிவிட்டன கண்ணீரோடு. கடற்கரை ஓரத்து சிவப்பு உயிர் மீட்டியது அவர்களது நினைவுகளை. மணற்துகள்களாய் அவர்களது நினைவுகள் அழிக்கப்படும் போது. இந்த கடற்கரை மணற்துகள்கள் அதை சேமித்து வைத்திருக்கின்றன.


                  கடலைகளே செவிமெடுங்கள் கற்றே கேள்  என் கவிதைகளை உங்கள் முன் தூவுகிறேன். என் கவிஞனும் அப்படித்தான் தன் கவிகளை வயல் வெளிகளுக்கு ஒப்புவித்தான். நான் உங்களிடம். ஏனனில் அதை நான் உங்களிடமிருந்துதான் திருடினேன். காதலியிடமிருந்து திருடப்பட்ட அவளது இதயம் போல் எத்தனை முறை திருடினாலும் இனிக்கிறது.

4 comments:

Anonymous said...

அருமையான வரிகள், வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிக்கிறது நிலாக்கடல்..

fasnimohamad said...

//manazeer masoon said...

அருமையான வரிகள், வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

fasnimohamad said...

//Blogger irfan zarook said...

இனிக்கிறது நிலாக்கடல்..//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...